Friday, November 23, 2012

கரும் பலகைகள்-(பூரணி கதைகள்)சிறுகதைத் தொகுதி

கரும் பலகைகள்

அது ஒரு சதுரமான ஹால். ஹாலை ஒட்டி, வலது புறம் சந்து போன்ற ஒரு அறை. எதிர் புறம் ஹாலை ஒட்டி இரு அறைகள். அந்த அறைகளில் வாத்தியாரின் குடும்பம் வாசம். ஹாலின் நான்கு மூலைகளிலும் அங்கங்கு சேர் டேபிள், பெஞ்சுகள், சுவர்களில் கரும்பலகைகள். நான்கு வகுப்புகள் அங்கு நடக்கும். அந்த வாத்தியார்தான் ஹெட் மாஸ்டர். அவரின் மனைவி நான்காம் வகுப்பு ஆசிரியை. ஒன்று, இரண்டு வகுப்புகளுக்கு வெளியிலிருந்து இரண்டு பெண் ஆசிரியைகள் வருவார்கள். சந்து போன்ற நீண்ட அறையில் பாலர் வகுப்பு நடக்கும். அந்த வகுப்பூக்கு ஹெட்மாஸ்டரின் மூத்த மகள் மேரி ஆசிரியை. வயது 22 இருக்கலாம். அது கிரிஸ்துவ மதத்தார் நடத்தும் பள்ளி ஆதலால் ‘பைபிள்' பாடம் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்ற மத போதனைப் படங்களும் உண்டு.

    வாத்தியாருக்கு ஆண் குழந்தை கிடையாது. இரண்டாவது மகள் ஜெசியும் மூன்றவது மகள் ரூபியும் ஹை ஸ்கூலில் படித்து வந்தனர். இரண்டாவது மகள் ஜெசியோடு அடிக்கடி ‘சிவா' என்னும் சக மாணவன் அவர்கள் வீட்டுக்கு வருவான். அந்த வாலிபன் கலகலப்பாக அவர்களோடு பழகுவான். பணக்காரப் பையன்.

    வகுப்பு நேரமாக இருந்தாலும் கூட அவன் வந்து விட்டால் மேரி உள்பட அந்தக் குடும்பமே அவனோடு பேச உட்கார்ந்துவிடும். பாடம் நடக்காது. வாத்தியார் குடும்பம் பொருளாதார வசதி குறைந்த குடும்பம். சிவா அவ்வப்போது  பொருள் உதவி செய்வான் என்று தோன்றியது. சிவா வந்தால் மேரி முகம் பூவாய் மலர்ந்துவிடும்.

    மேரிக்கு கலியாண முயற்சிகள் நடக்கலாயிற்று. முப்பது வயதுடைய தொழிலதிபர் ஒருவர் பெண் கேட்டு வந்தார். முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை விட்டுவிட்டுச் செத்துப் போய் விட்டதாகவும், ஆனாலும் ஆள் அம்பு நிறைய  இருப்பதால் அந்தக் குழந்தையை மேரி கவனிக்கத் தேவை இல்லை என்றும் சொன்னார்.

வாத்தியார் குடும்பத்திற்கு பூரண திருப்தி. ஆனால் மேரிக்கு விருப்பம் இல்லை. அழத் தொடங்கி விட்டாள். கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கவும் சிவாவின் வருகை அநேகமாக நின்று விட்டது.

ஒரு நாள் வாத்தியாரம்மாள் பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் “நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் முடியுமா? இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை? ஏகமான சொத்து. ரூபியின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்'' என்று.

கல்யாணம் சிறப்பாக நடந்தது. சர்ச்சுக்கு நாங்கள் மாணவியர் எல்லோரும் சென்றிருந்தோம். பிறகு என் படிப்பு நின்று, கல்யாணமாகி, நான் கணவன் வீடு சென்று விட்டேன்.

சில வருடங்கள் சென்று நான் பிறந்த வீடு வந்திருந்தேன். என் பள்ளித் தோழி பட்டு என்னைக் காண வந்திருந்தாள். வாத்தியார் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தேன். பட்டு வருத்தமாகச் சொன்னாள், “பாவம், மேரி செத்துப் போய் விட்டாள். அவள் புருஷன் மிகவும் கெட்டவனாம். மூத்த மனைவியை அவன் தான் கொன்றனாம். மேரியை மிக மிகக் கொடுமைப்படுத்தி, அவள் தங்கை ரூபியையும் கெடுத்து, அடித்து இருவரையும் மிகவும் துன்பப் படுத்தினானாம். ரூபியை அவனுக்குத் தெரியாமல் யாருடனோ பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தூக்கு மாடிக் கொண்டு செத்துவிட்டாள்''.

இவைகளைக் கேள்விப்பட்டு நான் கலங்கி அப்படியே நின்று விட்டேன்.