Thursday, December 12, 2013

“பூரணி” தோற்றம் 17-10-1913-மறைவு-17-11-2013


1913ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி, ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார், சம்பூரணமென்கிற எழுத்தாளர், பூரணி. அவர்கள் பெற்றோருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். அப்பா ராமசாமி அய்யர், தமிழ் பண்டிதர். பழநியில் 20 ஆண்டுகள் ஆண்கள் பள்ளியை தன் சொந்த பணத்தில் ஆரம்பித்து நடத்திவந்தார். பின் சொத்துக்கள் அழிந்துவிட்ட நிலையில் அந்தப் பள்ளியை அன்னிபெசண்டிடம் ஒப்படைத்து விட்டார். தாயார் சீதாலட்சுமி அம்மாள். கணவனின் தமிழைக் கேட்டுக் கேட்டு தமிழ் செய்யுள்களுக்குப் பொருள் கூறும் அளவுக்குப் புலமை பெற்றவர்.
ராமசாமி அய்யர் (1864ல் பிறந்தவர் இவர்) எழுதிய தொல்காப்பியத்திற்கான எளிய உரை எங்கள் வீட்டில் 1964 வரை இருந்தது, அப்போது எனக்கு வயது 14, அந்த சமயம் நாங்கள் கணியூரில் வசித்து வந்தோம், கையெழுத்துப் பிரதியாக இருந்தது. என் அம்மா சம்பூர்ண அம்மாவுக்கோ அதை நூலாகக் கொண்டுவர விருப்பம். அக்காலங்களில் அது பெரியவிஷயம். தாத்தாவை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவரைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறேன். ‘மடித்து வைத்த துணி மடி, வீழ்த்துப் போட்ட துணி விழுப்பு' என்பாராம். கோவில்களுக்கு வேண்டிக்கொள்ளுதல் இறைவனிடம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளுதல் போன்றவை தாத்தா காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிடையாது. பூரணி அம்மாவின் கொள்கைகளும் கருத்துக்களும் இதை ஒட்டியேதான் இருந்தன.
1927ல் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைத் தமிழில் கவிதை எழுத உபயோகித்தார் அம்மா. நாங்கள் ஒன்பது குழந்தைகள் அம்மாவுக்கு. ஓய்வு நேரம் எப்படிக் கிடைத்ததோ தெரியாது. அப்போது ஆரம்பித்த வாசிப்பும், எழுத்துப் பதிவும் இன்று வரை தொடர்கிறது. 85 ஆண்டுகளாக ஏறக்குறைய எல்லா நிகழ்வுகளையும் தனக்குத் தோன்றிய வடிவில் கவிதையாகவோ, கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ கண்டவை, கேட்டவை, என பதிவு ச்செய்துள்ளார். நாட்டுப்பற்று, சுதந்திரப் போராட்டம், காந்தி வந்தது, பெண் கல்விக்காக மெனக்கெட்டது, பெண்களுக்காக மாதர் சங்கம் நடத்தியது என்று தொடர்ந்து இயங்கி வந்து கொண்டிருக்கிறார். பாரதி கலைக் கழகத்தில் இணைந்து தனது மகன் கே.வி. ராமசாமியுடன் வீட்டில் கூட்டங்கள் நடத்தியது என, கவிதை பரிசு வாங்கியது என நிறைய நிகழ்வுகள். நவீன இலக்கியவாதிகளாக இருக்கும் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் அம்மாவுக்குத் தெரியும், அவர்களின் எழுத்துப் பதிவுகளின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக. நேர் பேச்சும் உண்டு.
‘ஸ்பேரோ' (sparrow) அமைப்புக்காக அம்மாவை ‘அம்பை' நேர்காணல் செய்ய வந்திருந்தார். ‘அம்பை' அம்மாவின் பேச்சிலும், எழுத்திலும் ஒரு பொறியைக் கண்டார். தனது நூல் காலச்சுவடு பதிப்பகம் மூலம்தான் முதலில் வர வேண்டும் என்று அம்மா விரும்பினார். ஏற்கனெவே, எஸ்வி.ராமகிருஷ்ணன் மூலம், சுந்தர ராமசாமியைக் கேட்கச் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. ‘அம்பை'யின் முயற்சியாலும், முன்னுரையாலும், அம்மாவின் முதல் புத்தகம் (அம்பை அம்மாவின் தன் வரலாறு போடலாம் என்றார். ஆனால் அம்மாவோ தன் கவிதைத்தொகுதி காலச்சுவடு மூலம் வெளிவர வேண்டுமென்று விரும்பினார்.) அவரது 90வது வயதில் -2003ஆம் ஆண்டு- “பூரணி கவிதைகள்” நூல் ‘காலச்சுவடு' வெளியீடாக வந்தது. அம்மாவும் நானும், இன்றுவரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூல் பரவலான கவனத்தையும், அதற்கான பணத்தையும் ‘காலச்சுவடு' மூலமாக நிறையவே பெற்றுத் தந்தது. (அதுவே ஒரு தவறான புரிதலுக்கும் காரணமாயிற்று மற்ற உறவினருக்கு. இப்படித்தான் நிறைய பணம் கிடைக்கிறது இலக்கியம் மூலமாக என்ற எண்ணமும் ஏற்பட்டுவிட்டது.) அதற்கு முன்னதாகவே நானும், என் கணவர் நாகராஜனும் அச்சிலும், இண்டெர்நெட் குழுமங்களிலும் அம்மாவின் படைப்புக்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தோம்.
“பூரணி நினைவலைகள்” (அவரது தன்வரலறு) எங்கள் சதுரம் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தோம். (2005) பின் சில காரணங்களினல், மணிவாசகம் பதிப்பகம் மூலம் அம்மாவின் சிறுகதை தொகுப்பு ‘பூரணி சிறுகதைகள்” (2009) என்னும் தலைப்பில் வெளிவந்தது. அம்மா, தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தான் வடிவமைத்து தன் குழந்தைகளுக்கும், பெயரர்களுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து என்னிடம் 2008ம் (200 பக்கங்களுக்கு) ஆண்டு நோட்டில் எழுதி கொடுத்தார். அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் அம்மாவின் “செவிவழிக் கதைகள்” நூல் வெளியாகி உள்ளது. அவர் தனது எல்லா படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுக்களில் பதிவு செய்து வைத்துள்ளார். 1937ல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்' இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘பாரத ஜோதி' இதழ்களிலும் அம்மாவின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.
அக்கால திருமணப் பாடல்களைத் தன் சொந்த வடிவத்தில் பாட்டுக்களாக இயற்றி, தொடங்கி இருக்கிறார் தன் கவிதை வெளிப்பாட்டை. பின் அதே பாடல்களில் தேசியத்தை கருப்பொருளாக்கினார். 1936-38 களில் மகளிருக்கு ஹிந்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஹிந்தியில் படித்துக் கொண்டும் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன், வாஜ்பேயின் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன். படித்துவிட்டு, அந்தக் கவிதைகளை மொழிமாற்றம் செய்து கொடுத்தார். வாஜ்பேயின் கவிதைகள் மரபு சார்ந்தவை எனவே அதை மரபுக் கவிதைகளில்தான் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று அழகாக செய்தார். அம்மாவுக்கு மறதி என்பதே கிடையாது. இன்று அவரின் ஒரு நோட்டு தொலைந்துவிட்டது என்று சொன்னால் அந்த நோட்டில் இருந்தவற்றை வரிசை தப்பாது அனைத்துக் கவிதைகளையும் மறுபடியும் எழுதி கொடுத்துவிடுவார். அதனால், தன் படைப்புக்களில் பத்திரிகை ஆசிரியர்கள் சிறு மாற்றம் செய்திருந்தாலும் உடனே சொல்லிவிடுவார். அந்த சொல்லை தான் உபயோகித்ததற்கான காரணத்தையும் கூறுவார். ‘சென்னை சங்கமம்' நிகழ்ச்சி 4ல் தானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டார். மேடையேறி கவிதையும் வாசித்தார்.
2004ம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருதும், 2007ம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் வழங்கிய தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும் பெற்றார். எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனின் இலக்கிய கூட்டமான ‘அக்கறை'யிலும் பங்கு பெற்று பாராட்டையும் பெற்றிருக்கிறார். கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி என்று இலக்கிய இதழ்களில் பலவற்றிலும் இலக்கிய பங்களிப்பு செய்திருக்கிறார். ‘திண்ணை' இன்டெர்நெட் இதழ்களிலும் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப் பற்றும், காந்தி மீது மரியாதையும் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் மீது பக்தியும் கொண்டவர். எங்களை விவேகானந்தரின் படத்தின் முன்னால் நின்று ‘பொய் சொல்லவில்லை நான் சொல்வது உண்மைதான்' என்று சொல்லச் சொல்லுவார். பொய் சொல்லியிருந்தால் நாங்கள் திரும்பவும் உண்மையை மட்டுமே கூறுவோம் அந்தப் படங்கள் மீது அவ்வளவு பக்தியும் மரியாதையும் எங்களுக்கு உண்டாக்கி இருந்தார்.
17-11-2013 (ஞாயிறு) அதிகாலை 2மணி அளவில் நிறைவாழ்வு வாழ்ந்த எனது தாயார் ‘பூரணி' என்னும் சம்பூர்ணம் அம்மாள் கைலாயப் பதவி அடைந்தார். (இந்தப்புகைப்படம் 2003இல் 'அம்பை' எடுத்தது)

No comments: